முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான அருண்ராஜ், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பில் இணைந்துள்ளார். இன்று பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜயின் முன்னிலையில், அவர் கட்சியில் இணையப்பட்டார்.
தவெகவின் மாநிலக் கட்டமைப்பில் அவருக்கு முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர் கட்சியின் கொள்கை பரப்புப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஏற்கனவே பொது செயலாளர்களாக இருந்த என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து, அருண்ராஜும் மூன்றாவது பொது செயலாளராக செயல்படவுள்ளார்.
இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண்ராஜ், “தவெகவில் நான் உண்மையான கொள்கை நிலைப்பாட்டைப் பார்க்கிறேன். பிற கட்சிகளில் இது பெயருக்கு மட்டுமே உள்ளது. அதனால், மாற்றத்துக்காக தவெகவை தேர்ந்தெடுத்தேன்,” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.